பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
முன்னுரை
சிங்கப்பூரில் மூன்றாம் தலைமுறை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக (PIO) இருக்கும் நான், தமிழில் எழுதப்பட்ட ஒன்றிணைவழி குறித்த முதல் நூல் என்று கருதப்படும் இந்த நூலுக்கு முன்னுரை எழுதுவதில் ஆழ்ந்த பணிவுடனும் பெருமிதத்துடனும் இருக்கிறேன்.
ஒன்றிணைவழி என்பது அதன் அடிப்படையில், மக்களை ஒன்றிணைப்பது, அர்த்தமுள்ள உரையாடலுக்கான தளத்தை உருவாக்குவது, பல்வேறு பார்வைகள் வெளிப்படுவதற்கு வாய்ப்பளிப்பது, மேலும் மக்கள் ஒன்றாக முன்னோக்கி நகர உதவுவது ஆகியவற்றைப் பற்றியது. கடந்த பல ஆண்டுகளாக, ஒன்றிணைவழியின் தொழில்முறை நடைமுறை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்திருந்தாலும், அதன் சாரம் ஆழமான மனிதத்தன்மை கொண்டதாகவும், பல வகைகளில் உலகளாவியதாகவும் இருக்கிறது.
ஒன்றிணைவழியின் ஆற்றல் (The Power of Facilitation) நூல், இந்தச் சாரத்தை குறிப்பிடத்தக்க வகையில் ஆராயும் ஒரு நூலாகும். பல்வேறு சூழல்களில் இடம்பெறும் கதைகள், அனுபவங்கள், சிந்தனைகள் மற்றும் எடுத்துக்காட்டுகளின் மூலம், நிறுவனங்கள், சமூகங்கள், தலைமைத்துவம், மூலோபாயத் திட்டமிடல், முரண்பாடுகளைத் தீர்த்தல், வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் தனிநபர் வளர்ச்சி ஆகிய தளங்களில் ஒன்றிணைவழி எவ்வாறு அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை இந்த நூல் எடுத்துக்காட்டுகிறது. இந்த நூலின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒன்றிணைவழியை கருவிகள் மற்றும் உத்திகளின் தொகுப்பாக மட்டுமே முன்வைக்காமல், சிந்திக்கும் முறை, இருப்பு நிலை (Being) மற்றும் மக்களுடன் ஈடுபடும் ஒரு அணுகுமுறை என்ற பரந்த தளத்தில் முன்வைக்கிறது. பல்வேறு ஆசிரியர்களின் பங்களிப்புகள், ஒன்றிணைவழி நடைமுறைகள் மற்றும் பார்வைகளின் வளமான தொகுப்பை ஒருங்கிணைக்கின்றன.
சர்வதேச ஒன்றிணைவழியாளர்கள் அமைப்பு (International Association of Facilitators) நீண்ட காலமாக ஒன்றிணைவழியின் தொழில்முறை நடைமுறையை முன்னெடுத்துச் செல்வதிலும், புவியியல் எல்லைகளையும் பண்பாடுகளையும் கடந்து அது பரவலாகக் கிடைக்கச் செய்வதிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த முயற்சியின் முக்கியமான ஓர் அங்கமாக, உலகின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் ஒன்றிணைவழியை எடுத்துச் செல்வது, அதன் அறிவையும் சாத்தியக்கூறுகளையும் ஆங்கில மொழியின் எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவது உள்ளது. உலகெங்கிலும் உள்ள ஒன்றிணைவழியாளர்கள், The Power of Facilitation நூலைத் தங்களது மொழிகளில் மொழிபெயர்த்து, ஒன்றிணைவழி குறித்த இலக்கியங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் இந்த முயற்சிக்குப் பங்களித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், ரமேஷ் ஸ்ரீனிவாசன் மற்றும் டாக்டர் நளினி ராஜேஷ் இணைந்து தமிழில் மொழிபெயர்த்துள்ள ஒன்றிணைவழியின் ஆற்றல் (The Power of Facilitation) நூல், மிகவும் வரவேற்கத்தக்க ஒரு முயற்சியாகும். அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு ஒன்றிணைவழி அமர்வின் மூலம் அதன் ஊழியர்கள் முக்கிய முடிவெடுக்கவும், தங்கள் நிறுவன குறிக்கோளை அடைய இணைந்து பணி புரிய முடிவெடுக்கவும் உதவியதைப் பற்றி அத்தியாயம் 9 ல் பகிர்ந்துள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் சமூகங்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகக் குழுக்களிடம் ஒன்றிணைவழியின் சாத்தியக் கூறுகளை எடுத்துச் செல்வதற்கு மிகுந்த வாய்ப்புள்ளது.
இந்தத் தமிழ்ப் பதிப்பு அனைத்து வெற்றிகளையும் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இது பரந்த மக்களைச் சென்றடைந்து, மேலும் பலர் தங்களது சொந்தச் சூழல்களில் ஒன்றிணைவழியைக் கண்டறிந்து, நடைமுறைப்படுத்துவதற்கு ஊக்கமளிக்கட்டும். “ஒன்றிணைவழியின் ஆற்றலைப் பரப்புதல்” என்ற IAF-ன் பரந்த நோக்கத்தை, சமூகங்கள், பண்பாடுகள் மற்றும் மொழிகள் அனைத்திலும் முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த முயற்சி பங்களிக்கட்டும்.
பிரபு நாயுடு
இணை நிறுவுனர்
Facilitators Network Singapore (FNS)
